பாபர் மசூதியை போன்று புதிய மசூதி கட்டுமானம்
அயோத்தி: புதிதாக கட்டப்பட உள்ள மசூதி பாபர் மசூதியை போன்றதாக இருக்கும் என புதிய மசூதி கட்டுமான அறக்கட்டளையினர் தெரிவித்து உள்ளனர். ராம் ஜன்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மசூதி கட்டுவதற்காக அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியது. இதனையடுத்து உ.பி.,மாநில மத்திய வக்பு வாரியம் இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை (ஐ.ஐ.சி.எப்) உருவாக்கி உள்ளது. இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் (ஐ.ஐ.சி.எஃப்) செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அதர் உசேன் கூறுகையில் இந்த திட்டத்தின் கட்டிடஆலோசகராக ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பேராசிரியர் எஸ் எம் அக்தர் இருப்பார் என்றார். ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் கட்டிடக்கலைத் துறை தலைவர் அக்தர் முழு வளாகமும் "இந்தியாவின் நெறிமுறைகளையும் இஸ்லாத்தையும் ஒன்றிணைக்கும்" என்றார். ஐந்து ஏக்கர் வளாகத்தில் ஒரு மருத்துவமனை, ஒரு நூலகம் மற்றும் ஒரு அருங்காட்சியகம் ஆகியவை இருக்கும் மசூதி 15,000 சதுர அடியில் இருக்கும். இந்த மசூதி பாபர் மசூதியை போன்று போன்று இருக்கும் என அருங்காட்சியகத்தின் ஆலோசகரும் கண்காணிப்பாளருமான புஷ்பேஷ்பந்த் தெரிவித்துள்ளார்.