மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மீண்டும் வழிபாட்டிற்கு திறப்பு
மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், பக்தர்கள் வழிபாட்டிற்காக நான்கு நாட்களுக்கு பின்பு நேற்று திறக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களாக மூடப்பட்ட மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், பக்தர்கள் வழிபாட்டிற்காக கடந்த, 1ல் திறக்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் ராஜாவுக்கு, கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த, 3ல் பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதித்து கோவில் மூடப்பட்டது. இதையடுத்து பணியாளர்கள், 20 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டது. தற்போது செயல் அலுவலர் ராஜா, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஊழியர்களுக்கு தொற்று இல்லாததால், நான்கு நாட்களுக்கு பின்பு நேற்று காலை, 8:00 மணிக்கு பத்ரகாளியம்மன் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது. செயல் அலுவலராக (கூடுதல் பொறுப்பு) அழகு லிங்கேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.