கோவில்களில் புரட்டாசி வழிபாடு கட்டுப்பாடுகள் சாத்தியமா?
பல்லடம்: கோவில்களில் புரட்டாசி மாத வழிபாடு துவங்க உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐந்து மாத ஊரடங்குக்கு பின், செப்., 1 முதல், தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கப்பட்டன. கோவில்களில் வழக்கமான பூஜைகளும், பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாத சூழலில், செப்.17 அன்று, புரட்டாசி மாதம் துவங்க உள்ளது.
புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும், பெருமாள் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வது வழக்கம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள சூழலில், புரட்டாசி மாத வழிபாட்டில், நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அறநிலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபாடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் கோவில் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே, புரட்டாசி மாத வழிபாடு துவங்க உள்ளதால், பெருமாள் கோவில்களில் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வர். டோக்கன் அடிப்படையில், பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கிராமப்புற கோவில்களில் இந்த நடைமுறை சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கோவில் வழிபாட்டு குழுவினர், இந்து அமைப்பினரின் உதவியுடன், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்ற முடியும் என்றார்.