கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, எண்ணேகொள்புதூர் தென்பெண்ணையாற்றின் கரையில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: வரலாற்று பேராசிரியர் விஷ்வபாரதி தகவலின்படி கண்டெடுக்கப்பட்ட, 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருமாள் சிலை, ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், 3 அடி உயரத்தில் உள்ளார். சிதிலமடைந்த கோவிலை புதுப்பிக்கும் போது, பழைய சிலைகளை ஆற்றில் விடுவது வழக்கம். அந்த வகையில் பெருமாள் கோவிலை புதுப்பிக்கும்போது, இந்த சிலைகளை ஆற்றில் விட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில், இந்த இடத்தின் அருகே உள்ள பெல்லம்பள்ளியில், 779 ஆண்டு பழமையான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. அதேபோல் சிலை கிடைத்த இடத்தின் அருகே, 350 ஆண்டு பழமையான மத்வ பிருந்தாவனம், இடிந்த நிலையில் உள்ளது. இந்த இடத்தின் அருகே இருந்த, பெருமாள் கோவில் சிலைகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது, என்றார்.