கோட்டை கோவிலில் அமாவாசை படி பூஜை
தர்மபுரி: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில், வைகாசி அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் மற்றும் 18 படி பூஜைகள் நடந்தது.
சபரிமலையில் 18 படி பூஜைகள் ஆண்கள் செய்வது போல், தர்மபுரி கோட்டை கோவிலில் காமாட்சியம்மன் சன்னதியில் உள்ள 18 படிகளில் அமாவாசை நாட்களில் பெண்கள் மட்டும் பங்கேற்று படி பூஜை செய்யப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி மாலை 4 மணிக்கு நிகும்பலா ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடந்தது. யாகத்தில், மிளகாய் வத்தல், மூலிகைகள், கடுகு, தேத்தான் கொட்டை மற்றும் ஹோம திரவங்கள் கொண்டு பக்தர்களின் வாழ்வில் மனத்துயரம் தீர கூட்டு வழிபாடு நடந்தது. செய் தொழில் சிரமங்கள் அகலவும், தம்பதியர் ஒற்றுமை, மனதை நெருடும் பிரச்னைகள் தீர அமாவாசையில் இந்த யாகம் நடத்துவது சிறப்பாகும். தொடர்ந்து காமாட்சியம்மன் சன்னதி 18 படிகளில் பெண்கள் படி பூஜை செய்தனர். பின் பல்லக்கில் அம்மன் 18 படி பூஜை வழிபாடு நடந்தது.