எந்தப்பணியில் ஈடுபட்டாலும் கடவுளை மறக்காதீர்கள்: சிருங்கேரி சுவாமி!
மதுரை: எந்தப் பணியில் ஈடுபட்டாலும் கடவுளை ஒருபோதும் மறக்கக் கூடாது, என்கிறார் சிருங்கேரி சுவாமி. மதுரை பைபாஸ்ரோடு சிருங்கேரி சங்கரமடத்திற்கு யாத்திரை செய்துள்ள சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமி, நேற்று காலை பக்தர்களுக்கு தரிசனம் அளித்து பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து 32வது பீடாதிபதி நரசிம்ஹ பாரதீ மகா சுவாமிகள் ஆராதனையை நடத்திவைத்தார். இரவில் சந்திரமவுலீஸ்வர பூஜை செய்தார். இன்று காலை 9க்கு சதசண்டீ மஹாயாகம்நடக்கிறது. 10-12 வரை பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். இரவு 8க்கு சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜை செய்கிறார். அவர் பக்தர்களுக்கு அருளியுள்ள அருளுரை: உலகிலுள்ள பணக்காரன், ஏழை, படித்தவன், பாமரன் என எல்லாருக்குமே ஒரே ஒரு விஷயத்தில் ஒற்றுமை காணப்படுகிறது. அது என்னவென்றால், "அனைவரும் எப்போதுமே சுகமாக இருக்க வேண்டும் என்பது தான். இவ்வாறு நிரந்தர சுகம் கிடைக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறுசுவை உணவோ அல்லது செவிக்கினிய இசையோ சுகத்தைத் தரமுடியுமா என்றால் நிச்சயம் இல்லை. ஏனெனில், இவை போன்ற புலன் இன்ப விஷயங்கள் அனைத்துமே ஒரு அளவிற்கு மேல் அனுபவிக்கப்படும் பட்சத்தில் துன்பத்தை தருவதாக மாறி விடும். மாறாக, புலனின்பத்தை விடுத்து கடவுளிடம் மனதை செலுத்தத் தொடங்கி விட்டால் துக்கத்தில் இருந்து தப்பிப்பதுடன், இறையருளால் நிரந்தர சுகத்தையும் அடையலாம். மனிதவாழ்வில் சுகமும், துக்கமும் மாறி மாறி வருகின்றன. சுகம் வரும் போது சந்தோஷத்தில் ஆடிப்பாடுகிறோம். கஷ்டம் வந்து விட்டால் நிம்மதி எப்போது கிடைக்கும் என்று தவிக்கிறோம். இப்படிப்பட்ட சமயத்தில், கஷ்டங்களை கடவுளிடம் மனம் விட்டு சொல்லி பிரார்த்தித்தால் நல்ல பலன் கிடைக்கும். பக்தி தான் ஒருவருக்கு பெரிய சொத்து. கடவுளின் நாமத்தை பக்தியோடு சொன்னால் எவ்வளவு பெரியகஷ்டம் வந்தாலும் சூரியனை கண்ட பனி போல மறைந்துவிடும். ஆயர்பாடியில் கோபியர் தயிர் கடையும்போது கூட,""கோவிந்தா! தாமோதரா! என்று இறை நாமத்தையே சொல்லிக் கொண்டுஇருந்தார்கள். அதுபோல, எந்த பணியில் ஈடுபட்டாலும் பக்தி செலுத்துவது தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்