உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி கோயிலுக்கு கொடிமர கயிறு வழங்கும் கிறிஸ்தவ குடும்பம்!

கன்னியாகுமரி கோயிலுக்கு கொடிமர கயிறு வழங்கும் கிறிஸ்தவ குடும்பம்!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவிற்கு கிறிஸ்தவ குடும்பம் கொடிமரக் கயிறு வழங்கும் பாரம்பரிய மத நல்லிணக்க விழா இன்று மாலை நடக்கிறது. இந்தியாவின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாவான வைகாசி விசாக பெரும் திருவிழா நாளை (25ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பாரம்பரிய விழாவான னைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்திற்கு பல ஆண்டு காலமாக கிறிஸ்தவ குடும்பம் கொடியேற்ற கயிறு வழங்கி வருகிறது. இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தற்போது விவேகானந்த நினைவு மண்டபம் காணப்படும் பகுதிவரை மணல் பரப்பாக இருந்துள்ளது. ஸ்ரீபாத மண்டபம் இருக்கும் இடம் வரை ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக இருந்துள்ளது. ஒரு நாள் அந்த மணல்பரப்பில் ஒரு சிறுமி இருந்துள்ளார். அப்போது மணல் பரப்பில் மீனவர்கள் வலை காயப்போட்டுக்கொண்டிருந்துள்ளனர். அந்த சிறுமி திடீர் என்று எனக்கு கால் வலிக்கிறது. மீன் கூடையில் என்னை அமர செய்து சுமந்து செல்லுங்கள். எந்த இடத்தில் வைத்து கனமாக இருக்கிறதோ அந்த இடத்தில் இறக்கி வையுங்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து மீனவர்கள் அந்த சிறுமியை கூடையில் வைத்து தலையில் சுமந்து சென்றுள்ளார். ஒரு இடத்தில் வந்தபோது கூடை கனமாக இருந்துள்ளது. அந்த இடத்தில் அவர் கூடையை இறக்கி வைத்தார். சிறுமி அந்த மீனவரிடம், நீங்கள் என்னை இறக்கி வைத்த இடத்தில் ஒரு கோயில் வரும். அந்த கோயிலில் விசாக திருவிழா கொடியேற்றம் நடக்கும்போது கயிறு கொண்டு வரும் பொறுப்பு உங்களுடையது என்று கூறி மறைந்துள்ளார். அதிலிருந்து காலகாலமாக கைலியார் குடும்பத்தினர் அந்த கொடிமரத்திற்கான கயிறு வழங்கும் பணியை செய்து வருகின்றனர். கைலியார் குடும்பத்தனர் கொண்டுவரும் கொடிமர கயிறு வாங்க தேவசம்போர்டு இன்றும் அந்த குடும்பத்தினருக்கு பணம் கொடுத்து வருகிறது. இந்த கொடிமரம் கொண்டுவரும் நிகழ்வு இனறு நடக்கிறது. ஆண்களும் பெண்களுமாக மேள தாளம் முழங்க இன்று கொடிமர கயிறை கொண்டு வந்து வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !