ஊட்டி அருகே சாய் கைலாஷ் திறப்பு விழா கோலாகலம்!
ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளியில் அமைந்துள்ள சாய் கைலாஷின் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளி பகுதியில் நீலகிரி மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில் சாய் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் திறப்பு விழா நேற்று நடந்தது. ஸ்ரீ சத்ய சாய் சேவை அமைப்பின் அகில இந்திய தலைவர் சீனிவாசன், கோவிலை கட்ட முயற்சி மேற்கொண்ட கோவிந்தராஜூலு ஆகியோர் குத்துவிளக்கேற்றி கோவிலை திறந்து வைத்தனர். பின்பு நடந்த விழாவில் மாவட்ட தலைவர் ராமு வரவேற்றார்.
108 பஜனை மண்டலங்கள்: மாநில தலைவர் வரதன் பேசுகையில்,பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஊட்டியில் சாய் ஸ்ருதியை நிறுவினார். பின்னர் 1985ம் ஆண்டில் ஊட்டியிலிருந்து கொடைகானலுக்கு சென்று விட்டார். பின்னர் ஊட்டிக்கு பாபா வரவில்லை. இந்நிலையில், தற்போது சாய் பாபாவுக்கு ஊட்டியில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 17ம் தேதியே பாபா குடியேறி விட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் பிறருக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். நீலகிரியில் 108 பஜனை மண்டலங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பஜனை நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன் மாதிரியாக கொண்டு பல சேவை மையங்கள் உருவாகும், என்றார்.
பக்தியில் முதிர்ச்சி: மாநில இளைஞர் ஒருங்கிணைப்பாளர் விஜயகிருஷ்ணன் பேசியதாவது; சுவாமியின் விரும்தோம்பலில் நாம் இன்று உள்ளோம். ஊட்டி என்றாலே பாபா குதூகுலமாகி விடுவார். ஊட்டியில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு. பிப்ரவரி மாதம் ஊட்டியின் பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவது வழக்கம். இதனால் பக்தர்களுக்காக பெருமான் காத்திருப்பார். பக்தர்கள் பாபாவிடம் முழுவதுமாக சரணாகதியாகி விடுவர். தங்கள் தோட்டத்தில் பகவானுக்காக தனி இடம் ஒதுக்கி, அதில் விளையும் காய்கறிகளை ஆண்டுதோறும் பாபாவுக்கு படைப்பர். இவர்களின் பக்தியில் முதிர்ச்சி இருக்கிறது. பாபா நீலகிரியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வந்துள்ளார். அவர் வந்தற்கான அடையாளங்கள் இன்றும் உள்ளன. தனது முதல் பள்ளியை ஊட்டியில் தான் பகவான் அமைத்தார். 18 அவதாரங்களை கொண்ட லாக்கெட்டை வடிவமைக்கும் போது பாபா ஊட்டியில் இருந்தார். ஊட்டியில் உள்ள இந்த கோவில் மகா ஷேத்திரமாக மாற போகிறது. இதற்கான பாபாவின் அனுகிரகம் இந்த கோவிலுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு விஜயகிருஷ்ணன் பேசினார்.