உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா காஞ்சி கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகா காஞ்சி கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, புதிதாக கட்டிய, மகா காஞ்சி கணபதி கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் காந்தி நகரில், புதிதாக மகா காஞ்சி கணபதி கோவில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா முதல் கால யாக வேள்வி பூஜையை, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார். சாந்தலிங்கர் அருள்நெறி மன்ற மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் தலைமையில், கருவலூர் மூர்த்தி, பண்ணாரியம்மன் நடைபயணக்குழு குருசாமி ரங்கசாமி, விருட்சபீடம் லட்சுமி தாஸ் சுவாமி ஆகியோர் முன்னிலையில் யாக வேள்விகள் நடந்தன.

நேற்று முன்தினம் இரவு விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜையை அடுத்து, தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி வலம் வந்து, கோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்றனர். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ், முன்னாள் எம்.பி., செல்வராஜ், காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, இலுப்பநத்தம் ஊராட்சித் தலைவர் ரங்கசாமி உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் முருகேசன், செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !