உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலையத்துறை உத்தரவால் கோயில் பணிகளில் குழப்பம்

அறநிலையத்துறை உத்தரவால் கோயில் பணிகளில் குழப்பம்

சென்னை : அறநிலையத் துறை வழக்கு தொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தல் பற்றிய தவறான புரிதல் காரணமாக தமிழக கோயில்களில் நடக்கும் திருப்பணி பராமரிப்பு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற அறிவுறுத்தலை தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த கோவில் புனரமைப்பு குழு தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தன.புனரமைப்பு குழு தொடர்பான வழக்கில் விரைவில் உத்தரவு பிறப்பிக்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கு விசாரணையின் போது பழமை வாய்ந்த மூன்று கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக் கூடாது; இது குறித்து இணை ஆணையர்கள் நிர்வாக அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு கமிஷனர் பிரபாகர் சுற்றறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். அதில் உயர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் அறிக்கையின்படி நீதிபதிகள் அறிவுறுத்தலை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழகத்தில் பல கோவில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் பெரும்பாலான கோவில்களில் சன்னிதிகளை தவிர கோவில் வளாக மேற்கூரை மடப்பள்ளி நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சீரமைப்பு மழைக்கால பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அறநிலையத் துறை கமிஷனரின் சுற்றறிக்கை திருப்பணிகள் பராமரிப்பு நடக்கும் அனைத்து கோவில்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் அனைத்து பணிகளையும் கிடப்பில் போடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிபதிகளின் அறிவுறுத்தல் பற்றிய தவறான புரிதலே இந்த சுற்றறிக்கை என கருதப்படுகிறது. எனவே நீதிமன்ற அறிவுறுத்தலை தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !