உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரவணப் பொய்கையில் உயிர் பலியை தடுக்க பாதுகாப்பு தேவை

சரவணப் பொய்கையில் உயிர் பலியை தடுக்க பாதுகாப்பு தேவை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கைக்குள் குளிக்க வருவோர் உயிர் பலியாவதை தடுக்க கோயில் நிர்வாகம், தண்ணீருக்குள் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தென்பகுதியில், கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கை உள்ளது. அதிக ஆழம் கொண்டது. ஒரு பகுதியில் படிக்கட்டுகளும், ஒரு பகுதியில் மலை அடிவாரப்பாறையும் உள்ளது. அப்பகுதியில் உள்ளோரும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் துணி துவைக்க, குளிக்க அங்கு செல்கின்றனர். சரவணப் பொய்கை அருகே வழுக்குப் பாறையில் சிறுவர்கள், குளிக்கும் போது வழுக்கி விழுந்து பலியாகினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வழுக்குப்பாறை பகுதியில் குளிக்க தடை விதித்ததுடன், இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. விடுமுறைநாட்களில் சரவணப்பொய்கைக்கு வருவோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நீச்சல் தெரியாதவர்கள் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பர். நண்பர்களோ, குடும்பத்தினரோ, தண்ணீருக்குள் நீந்துவதைப் பார்த்து, ஆர்வமிகுதியால், அவர்களும் குதித்து விடுகின்றனர். அவர்களில் சிலரும் இறந்துள்ளனர். இப்படி இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சரவணப்பொய்கைக்குள் படிக்கட்டுகளில் இருந்து, ஆழம் குறைவாகஉள்ள பகுதிவரை தண்ணீருக்குள் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்க வேண்டும். அப்போதுதான், நீச்சல் தெரியவாதர்களும், பக்தர்களும், அந்த தடுப்பை தாண்டி செல்வதை தடுத்து, உயிர் பலியை நிறுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !