வைகாசி விசாகத் தேரோட்ட விழா: பக்தர்கள் பங்கேற்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வைகாசி விசாக தேரோட்டத்தை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் பரிவார மூர்த்திகளுடன் திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாளித்தார். திருச்செங்கோடு வைகாசி விசாகத்தேர் திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவ பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 14 நாட்கள் நடக்க உள்ள திருவிழாவின் முதல் நாள் விழாவாக கொடியேற்றமும், அடுத்த மூன்று நாட்கள் மண்டபக் கட்டளைகளும் நடந்தது. நான்காவது நாள் விழாவாக, திருமலையில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கொடியேற்று விழா நடந்தது. கோபுரவாசல் மண்டபக் கட்டளையை அடுத்து, அர்த்தநாரீஸ்வரர். பரிவாரமூர்த்திகளுடன் திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளினார். திருக்கோவிலில் இருந்து நகருக்கு அர்த்தநாரீஸ்வரர் படிககட்டு வழியாக வந்தபோது, மாங்கனி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மின் விளக்குகளாலும், பூக்களாலும், அலங்கரிக்கப்பட்டிருந்த புஷ்பபல்லக்கில், ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. திருச்செங்கோடு அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர்.