திருவாடானையில் முன்னோர்கள் கட்டிய தெப்பக்குளம் சிதைந்தது: பக்தர்கள் வேதனை
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் முன்னோர்களால் கட்டப்பட்ட தெப்பக்குளங்களை பராமரிக்காததால் சேதமடைந்து வருகிறது.
திருவாடானை தாலுகாவில் கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. பெரும்பாலான கோயில்களின் முன் முன்னோர்கள் கட்டிய தெப்பக்குளங்கள் உள்ளன. அக் காலத்தில் நீரை சேகரிக்க வேண்டும் என்று எண்ணியதால் ஆங்காங்கே தெப்பக்குளங்கள் கட்டப்பட்டன.பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் கட்டப்பட்ட இக் குளங்கள் தற்போது சேதமடைந்து, சுற்றுசுவர் இடிந்து விழுந்து விட்டதால் பயன்பாடு குறைந்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழையால் அனைத்து குளங்களும் நிரம்பிவிட்டன. ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் தேங்க வழியில்லாமல் குறைந்து வருகிறது. இத் தாலுகாவில் சில குளங்களை தவிர பெரும்பாலான குளங்களை பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர். திருவாடானை அய்யனார் கோயில் அருகில் அக் காலத்தில் கட்டப்பட்ட மங்களநாதன் குளம் உள்ளது. இக் குளம் நிரம்பும் பட்சத்தில் இரு ஆண்டுகளுக்கு தண்ணீர் கஷ்டம் இல்லாமல் பொதுமக்கள் குளிக்க பயன்படுத்துவர்.சில மாதங்களுக்கு முன் இக் குளத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதை சீரமைக்காததால் சுவர்கள் சிறிது, சிறிதாக இடிந்து விழுந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் மற்ற சுவர்களும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
திருவாடானை பகுதி மக்கள் கூறியதாவது:இக்குளத்திற்கு செல்லும்வடிகால் துார்ந்துவிட்டது.இந்த ஆண்டு மழை பெய்த போது குளக்கால் வழியாக சென்ற நீரை ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் சில சமூக ஆர்வலர்களும் சேர்ந்து மோட்டார்மூலம் குளத்தை நிரப்பினர். ஆனால் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டதால் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. மழை காலத்திற்கு முன்பே சீரமைத்திருந்தால் மிகுந்த பயனாக இருந்திருக்கும்.நம் முன்னோர்கள் கட்டிய இக் குளம் பயன்படாமல் போய்விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டுஉள்ளது. இதே போல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்புள்ள தெப்பக்குள சுவர்களின் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது.