மண்டு மாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் பால்குட ஊர்வலம்
கிருஷ்ணகிரி: மண்டு மாரியம்மன் கோவில் கங்கணம் கட்டும் திருவிழாவை முன்னிட்டு, நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில், மண்டு மாரியம்மன் கோவில் கங்கணம் கட்டும் திருவிழா கடந்த, 1ல் துவங்கியது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு பூ அலங்காரம், பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மதியம், 3:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் மற்றும் கரகம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். மண்டு மாரியம்மன் சிலை ஊர்வலம் ஆகியவை, ராயக்கோட்டை சாலையில் இருந்து மண்டு மாரியம்மன் கோவில் வரை நடந்தது. பின்னர், கோவிலில் அம்மன் சிலைக்கு பால் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு நாட்டியாலயா நிகழ்ச்சியும், இரவு, 12:00 மணிக்கு வாணவேடிக்கையும் நடந்தது. இன்று (மார்ச் 7) சிறப்பு பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பெத்ததாளாப்பள்ளி, காமராஜ் நகர் மக்கள் செய்திருந்தனர்.