வேத மந்திரங்கள் முழங்க வேலாயுத சுவாமிக்கு கும்பாபிஷேகம்
பல்லடம்: வேத மந்திரங்கள் முழங்க, பல்லடம் அடுத்த தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, செஞ்சேரிமலை எனப்படும் தென்சேரிமலையில் அமைந்துள்ளது மந்திரகிரி வேலாயுதசாமி கோவில். வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த, 19ம் தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவற்றுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு வேள்விகள், திருமுறை பாராயணம், மற்றும் ஆறு கால வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9.30க்கு மந்திரகிரி வேலாயுத சுவாமி கோபுரம், மற்றும் விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கும், இதையடுத்து, வள்ளி தேவசேனா சமேத மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மலர்களால் அர்ச்சனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மந்திரகிரி வேலாயுத சுவாமி யின் கும்பாபிஷேகத்தை பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.