செயற்கை வைகையில் இறங்கிய அழகர்
மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வைகையாற்றில் அழகர் இறங்கும் விழா, அழகர்கோவில் ஆடி வீதியில் நடந்தது. பச்சை பட்டு உடுத்தி, நீர் நிரப்பப்பட்ட தாமரை தடாகத்தில் இறங்கிய அழகரை, ஆன்லைனில் கண்டு, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
மதுரை அழகர் கோவிலில், சித்திரை திருவிழா ஏப்., 23ல் துவங்கியது. தினமும் சுவாமி, கோவில் வளாகத்தில் வலம் வந்தார். நேற்று காலை, சுவாமிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, காலை, 8:30 மணிஅளவில் கோவில் ஆடி வீதியில், செயற்கையாக உருவாக்கப்பட்ட தாமரை பூ, இலைகள் பரப்பப்பட்ட, வைகையாற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி, குதிரை வாகனத்தில் இறங்கினார்.
கொரோனா பரவல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், ஆன்லைனில் கண்டு தரிசித்தனர்.ஆற்றில் குவிந்த மக்கள்ஆண்டுதோறும், மதுரை ஏ.வி.பாலம் அருகில் உள்ள ஆழ்வார்புரம் வைகையாற்றில், அழகர் இறங்குவார். கொரோனா காரணமாக கடந்தாண்டும், இந்தாண்டும் இந்நிகழ்ச்சி ரத்தானது.ஆனாலும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், நேற்று ஆழ்வார்புரம் வைகையாற்றுக்கு வந்து மொட்டை அடித்தும், சர்க்கரை சூடன் ஏந்தியும், அழகர்கோவில் திசை நோக்கி வழிபட்டனர்.
அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியிலும், பலர் நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று காலை, 10:30 மணிக்கு சேஷ வாகனத்தில், சுவாமி உலா நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுப்பதற்காக, கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். ஏப்., 30 காலை, பூப்பல்லக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், கோவில் வளாகத்தில், பக்தர்களின்றி நடத்தப்பட உள்ளன.