பிள்ளையார்பட்டி, குன்றக்குடி கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
பிள்ளையார்பட்டி : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் நேற்று ஊரடங்கு தளர்வுக்குப் பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை கோயிலில் பூர்வாங்க பூஜை நடந்து காலை 6:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. மூலவர் தங்கக்கவசத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு வெப்பச் சோதனை செய்து கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக் கவசத்துடன் இடைவெளி விட்டு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான ஹோமம் மற்றும் அர்ச்சனை அனுமதிக்கப்படவில்லை. சுவாமி தரிசனத்திற்கு பின் பக்தர்கள் தாமாகவே தீபாராதனை தட்டை வணங்கி, திருநீறு பிரசாதம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கோயில் கடைவீதிகளில் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
*குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில், காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். முதல் நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.