கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!
ADDED :4855 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையையொட்டி காலை 10.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி - கோவை ரோட்டிலுள்ள மாகாளியம்மன் கோவில், கரியகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் அமாவாசையையொட்டி அபிஷேக பூஜைகள் நடந்தன. அதுபோல், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் நேற்று அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக, ஆனைமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில், கட்டணத்தை விட கூடுதலாக ஒரு ரூபாய் வாங்கினர். இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.