பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பக்தர்கள் நேர்த்தி
சிவகங்கை-சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இக்கோயிலில் ஜூலை 9 ம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு நித்திய பூஜை நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று காலை பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கொரோனா ஊரடங்கால் மக்கள் கூட்டமாக செல்ல தடை உள்ளதால், பக்தர்கள் உரிய சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து அம்மனை தரிசித்தனர்.நகரில் உள்ள நேரு பஜார் வீரமாகாளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், கோட்டை முனீஸ்வரர் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வழக்கமாக விழாக்கோலமாக காட்சி அளிக்க வேண்டிய சிவகங்கை, நேற்று கொரோனா ஊரடங்கு தடையால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததோடு, சமூக இடைவெளியுடன் அனைத்து கோயில்களிலும் வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு பக்தர்கள் பூச்சொரிந்து நேர்த்தி செலுத்தினர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாக அலுவலர் ஞானசேகரன் தலைமையில் கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவகங்கை நகர் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.