உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அடைக்கல அம்மன்

ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அடைக்கல அம்மன்

பல்லடம்: ஆடி மாதம் நிறைவு விழாவை முன்னிட்டு, ஆங்கிலேயர் வழங்கிய புடவையில், அம்மன் அருள்பாலித்தார்.

பல்லடம் அருகே, வதம்பச்சேரி ஊராட்சி நல்லூர்பாளையம் கிராமத்தில், பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடிமாத நிறைவு விழா நடந்தது. அதில், ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட புடவையுடன் அம்மன் அருள்பாலித்தார். கிராம மக்கள் கூறுகையில், பல நூறு ஆண்டுக்கு முன், வதம்பச்சேரி கிராமம் வழியாக ஆங்கிலேயர்கள் தங்களது படையுடன் வந்தபோது, பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர். ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க பெண்கள், இங்குள்ள அம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். பெண்களை விரட்டியபடி, கோவிலுக்கு வந்த ஆங்கிலேயர்களுக்கு கண் பார்வைக் கோளாறு ஏற்பட்டது. அவரை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டிக் கொள்ளுமாறு ஊர் மக்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து அவர்களின் கண்பார்வை கோளாறு சரியானது. அதன் காரணமாக, அம்மனுக்கு பட்டு, மற்றும் கதர் சேலைகள் வழங்கி வழிபட்டு சென்றனர். அழகுநாச்சி அம்மன் என்ற பெயர் கொண்ட அம்மன், பெண்கள் அடைக்கலம் ஆன இச்சம்பவத்தை தொடர்ந்து, அடைக்கல அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் இச்சம்பவம் நடந்தது ஒரு ஆடி மாதம் என்பதால், ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல், மற்றும் கடைசி வெள்ளிக்கிழமை, ஆங்கிலேயர் வழங்கிய புடவையை சாற்றி வழிபடுவதை வழக்கமாகக் கடைபிடித்து வருகிறோம் என்றனர். ஆங்கிலேயர் வழங்கிய புடவையுடன், அடைக்கல அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, ஆடி மாத நிறைவு விழாவை கிராம மக்கள் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !