உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்துநாள் உற்ஸவம் சதுர்த்திப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இன்று காலை மூலவர் தங்கக் கவசத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளினார். 10:30 மணிக்கு கொடிமரத்தருகே உத்ஸவ விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளினார். தொடர்ந்து தலைமை குருக்கள் பிச்சைசிவாச்சாரியார் தலைமையில் கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரத் தீபராதனை நடந்தது.

பின்னர் மாலையில் வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகர் எழுந்தருளினார். நாளை காலை வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் எழுந்தருளலும், இரவில் விநாயகர் பிரகாரம் வலம் வருதலும் நடைபெறும். ஏற்பாடு குறித்து பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி அ.ராமசாமி மற்றும் வலையப்பட்டி மு.நாகப்பன் ஆகியோர் கூறுகையில்,‛ தற்போதைய சூழ்நிலையில் அரசு விதிகளின் படி விழா கோயிலுக்குள் நடைபெறுகிறது. பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நேரில் வர முடியாதவர்கள் யூ ட்யூப் மூலம் நேரலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !