உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தக்கரை மகா கணபதி கோவில் தேரோட்டம் கோலாகலம்

மந்தக்கரை மகா கணபதி கோவில் தேரோட்டம் கோலாகலம்

பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழாவையொட்டி மந்தக்கரை மகாகணபதி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருவிழாவின் முதல் நாளில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, கணபதி, சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட தேரில், நான்கு வீதிகளிலும் உலா வந்தனர். இரண்டாம் திருநாளான நேற்று மந்தக்கரை மகாகணபதி கோவில் தேரோட்டம் நடந்தது.

செண்டை மேளம் முழங்க, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக காலை 8:30 மணி அளவில் வேதபாராயணம் நடந்தது. 11:00 மணியளவில் மந்தக்கரை மகாகணபதி கோவிலில் கடந்த 50 ஆண்டுகளாக சேவை செய்யும் புரோகிதர் அய்யு வெங்கடேஸ்வரனை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தன. அத்துடன் அவருக்கு காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரி பதவியும் அளித்து கௌரவித்தனர். மடத்தின் பிரதிநிதி வெங்கட்ராமனின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தன. இன்று பழைய கல்பாத்தி லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில், சாகுபுரம் பிரசன்ன கணபதி கோவில்களில், தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே ரதோற்சவத்தின் சிறப்பு அம்சமான ஆறு தேர்களின் சங்கமும் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடத்தும் விழாவில் பக்தர்களின் கூட்டத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியுள்ளன. விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !