உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் தீப நாளில் பக்தர்கள் பரவசம்

திருத்தணி முருகன் கோவிலில் தீப நாளில் பக்தர்கள் பரவசம்

 திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை கிருத்திகை மற்றும் தீபத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, இரு மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் மலைக் கோவிலில், கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், காவடி மண்டபம் அருகே மயில் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப் பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மாடவீதியில் ஏற்றப்படும் சொக்கப்பனை தீபம், மயில் மண்டபத்தில் ஏற்றப்பட்டது.அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 250 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மகா தீபம் ஏற்றப்பட்டது.அப்போது, மலைக்கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா... அரோகரா என, பக்தி முழக்கமிட்டனர்.இந்த தீபத்தை பார்த்த பின், திருத்தணி நகரத்தில் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.நேற்று காலை முதல் மாலை வரை மழை இல்லாததால், மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்து, பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கார்த்திகை மாத கிருத்திகை, தீப நாள் பிரார்த்தனைக்காக, ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்தனர். மொட்டையடித்து, சரவணப் பொய்கை குளத்தில் நீராடினர்.பின், கோவில் வட்ட மண்டபம், 16 கால் மண்டபம் அருகே, கற்பூரம், அகல் விளக்கு தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டையில் சுப்ரமணிய சுவாமி கோவிலில், 7 அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு நேற்று, காலை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவரும், மலர் அலங்காரத்தில் உற்சவர் முருகரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !