அறநிலையத் துறையில் புதிதாக தாசில்தார், தட்டச்சர் உட்பட 108 பணியிடங்களுக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் தாசில்தார், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர் என, 108 பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த, நடப்பு நிதியாண்டிற்கு 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு, 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில், வட்டாட்சியர் உட்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும் என, சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது, துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி, ஹிந்து சமய அறநிலையத் துறையின், 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும், தலா ஒரு தாசில்தார் பணியிடம் புதிதாக ஏற்படுத்தலாம். துணை பணியிடங்களாக, தலா ஒரு தட்டச்சர், ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தலாம் என, அரசுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிந்துரை செய்தார். அதை பரிசீலனை செய்த அரசு, மொத்தம் 108 பணியிடங்களை தோற்றுவிக்கலாம்; தாசில்தார் பணியிடங்களை, வருவாய் துறை வழியே, அந்தந்த மாவட்ட அலகில் இருந்து, மாற்றுப்பணி அடிப்படையில் நிரப்ப அனுமதி அளித்து உத்தரவிட்டது. புதிய பணியிடங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கு தொடரும் செல வினமாக, ஊதிய செலவினத்திற்கு 3.41 கோடி ரூபாய்; தொடரா செலவினத்திற்கு 45 லட்சம் ரூபாய்.அலுவலக தளவாடங்களுக்கு 27 லட்சம் ரூபாய் என, மொத்தம் 3.86 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் தொடரும் செலவினமாக, 8.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.