உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கங்காவதரண மகோத்சவம்: பக்தர்கள் புனித நீராடினர்

ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கங்காவதரண மகோத்சவம்: பக்தர்கள் புனித நீராடினர்

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் ஸ்ரீதரஐயவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(04ம் தேதி) கங்காவதரண மகோத்சவ நீராடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் புனித நீராடி வழிபட்டனர்.  
 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லுாரில், ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நுாற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பக்தி நெறி தவறாதவர்.  ஒரு சமயம் ஐயாவாள் தன் தந்தையாருக்கு, நீத்தார் கடனைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக புரோகிதர்கள் சிலரை வரவழைத்தார். சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அந்த புரோகிதர்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும். அந்த நேரத்தில், ஐயாவாள் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்துவிட்டார். உடனே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கி கிடந்த அவருக்கு ஊட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர். நீ கங்கைக்கு சென்று நீராடி வந்தால் தான் இந்த பாவம் நீங்கும் என கூறிச சென்றனர்.  ஐயவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என கடவுளை நினைத்து வேண்டினார்.

அப்போது ஐயாவாள் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள் ஐயவாளிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் ஐயாவாளும் செய்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி (04ம் தேதி) அதிகாலை 4.30 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும்  நீராடி மடத்துக்கு ஈரத்துணியோடு வந்து மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !