விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் குடிநீர் பற்றாக்குறை; பக்தர் தவிப்பு
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை, தேய்பிறை அஷ்டமி போன்ற முக்கிய நாட்களில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
கோவில் வளாகத்தில், பக்தர்கள் குடிக்க, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. அதையே, பிரசாதம் சாப்பிட்டவர்கள் கை கழுவவும் பயன்படுத்தி வந்தனர். கோவிலுக்கு வருவோர், கை, கால்களை கழுவி சுத்தம் செய்து விட்டு வர, வெளியே தண்ணீர் குழாய் வசதி செய்யப்பட்டது.நீண்ட நாட்களாக, தண்ணீர் வராததால், பக்தர்கள் கை, கால்களை கழுவி சுத்தம் செய்ய வசதியில்லாமல் தவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக, கோவில் வளாகத்துக்குள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், அதிக வருவாய் உள்ள கோவிலாக இருந்தும், கை, கால்கள் கழுவ தண்ணீர் வசதி செய்யப்படாமல் இருக்கிறது. சில நாட்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கிடைப்பதில்லை. கை, கால்களை கழுவ தண்ணீர் வசதியும், சுத்திகரிக்கப்பட்ட கூடுதல் குடிநீர் வசதியும் செய்து கொடுக்க வேண்டும், என்றனர்.இதுகுறித்து செயல் அலுவலர் சீனிவாசன் கூறுகையில், பக்தர்களுக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியே உள்ள தண்ணீர் குழாயை, ரோட்டில் சென்று வருவோர் பயன்படுத்துகின்றனர். எனவே, கை, கால் கழுவும் தண்ணீர் குழாய், கோவில் வளாகத்திற்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.