சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் சாமி தரிசனம்
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இதமான தட்பவெப்ப சூழலில், காலை 10 மணிவரை சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். மாலை 4:30 மணிக்குமேல் கோவிலில் பிரதோஷ வழிபாடு துவங்கியது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூஜாரிகள் பிரதோச பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன், கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.