பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு பின் கிடைத்தது சுவாமி தரிசனம்
பழநி,:பழநி தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், கோவில் மூடப்பட்டதால் அங்கேயே தங்கியிருந்து, ஐந்து நாட்களுக்கு பின் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தைப்பூச திருவிழா ஜன., 12ல் துவங்கியது; நேற்று தேரோட்டம் நடந்தது. ஜன., 14 முதல் ௧8 வரை கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில் மூடப்படுவதாகவும், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்திருந்தது. நேர்த்திக்கடன் செலுத் தும் நோக்கில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழநிக்கு வந்தனர்.
தரிசனத்திற்கு அனுமதி மறுத்த நாட்களில் ஊர் திரும்பாமல், பழநியில் உள்ள மடங்கள், மண்டபங்கள், கிரிவீதி மற்றும் பொது இடங்களில் தங்கினர்.ஐந்து நாட்களுக்கு பின் நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் கிரிவலப் பாதையில் கும்மியடித்து, காவடி ஆட்டம் ஆடி, அலகு குத்தி, மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் அதிகம் இருந்ததால், சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்கள் நான்கு மணிநேரம் வரை வரிசையில் காத்திருக்க நேரிட்டது. ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ராமேஸ்வரம் கோவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்ட ராமேஸ்வரம் கோவிலும், ஐந்து நாட்களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவில் அக்னி தீர்த்த கடலில் நீராடியதுடன், கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் முக கவசம் அணிந்தபடி சுவாமி, அம்மன் சன்னதியில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.