உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 500 கி.மீ.,கடந்து ஆதியோகி ரதம் கோவைக்கு வருகை

500 கி.மீ.,கடந்து ஆதியோகி ரதம் கோவைக்கு வருகை

அன்னூர்: சென்னையில் புறப்பட்ட ஆதியோகி ரதம் 500 கி.மீ., தூரம் பயணித்து, கோவை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தது.

கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், உள்ள ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகா சிவராத்திரி விழா நடக்கிறது. மகாசிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆதியோகி சிவன் உருவம் தாங்கிய ரதமும், அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீற்றிருக்கும் ரதமும், சென்னை அருகே மாதவரத்தில் கடந்த 2ம் தேதி புறப்பட்டன. ரதத்துடன் 85 சிவாங்க பக்தர்கள் பாதயாத்திரையாக சேலம், பவானி வழியாக நேற்று கோவை மாவட்டத்தின் எல்லையான அன்னூருக்கு வந்தனர். அங்கு தென் கைலாய பக்தி பேரவை மற்றும் சிவாங்க பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, இதையடுத்து குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவிலில் வழிபாடு நடந்தது. பக்தர்கள் ஆதியோகி ரதத்தை வழிபட்டனர்.

சிவாங்க பக்தர்கள் கூறியதாவது: மகா சிவராத்திரியன்று விழித்திருந்து சிவனை வழிபடும் போது நம் உடலில் உள்ள நேர்மறையான சக்திகள் வலிமை பெறுகின்றன. சிவராத்திரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ரதம் 9 மாவட்டங்கள் வழியாக, 1200 கிராமங்களில் 500 கி.மீ., தூரம்பயணம் செய்து, தற்போது கோவை மாவட்டம் வந்துள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த ரதம் வருகிற 28ம் தேதி வெள்ளிங்கிரி மலை அடிவாரத்திற்கு செல்கிறது. இதேபோல், நாகர்கோவிலில் இருந்தும், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்தும் வெள்ளிங்கிரி மலை நோக்கி ரதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு, சிவாங்க பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !