பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பால்குட விழா
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க பரவசத்துடன் பால் குடங்களை எடுத்து வந்தனர்.
இக்கோயிலில் மார்ச் 11 அன்று கொடியேற்றத்துடன் பங்குனி விழா துவங்கியது. மார்ச் 19 இரவு 8:00 மணிக்கு மின் தீப அலங்காரத் தேரில் அம்மன் வலம் வந்தார். தொடர்ந்து இன்று காலை 4:00 மணி தொடங்கி பரமக்குடி வைகை ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலில் பால் குடங்களை சேர்த்தனர். இதன்படி தொடர்ந்து 6 மணி நேரம் நடந்த ஊர்வலம், காலை 10;00 மணிக்கு நிறைவடைந்தது. 5 அடி முதல் 15 அடி வரை வேல் குத்தி பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் காலை 11:00 மணி தொடங்கி, 1:00 மணி வரை சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உட்பட குடம், குடமாக மூலவர் மற்றும் உற்சவருக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.