மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக அதிகாரிகள் ஆய்வு
கூடலூர்: தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஏப். 16-ல் சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படும் நிலையில் தமிழக அதிகாரிகள் நேற்று கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக -கேரள எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கோயிலுக்குச் செல்ல கேரள வனப்பகுதி வழியாக குமுளியில் இருந்து 14 கி.மீ., தூர ஜீப் பாதையும், தமிழக வனப்பகுதி வழியாக பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ.,தூரம் நடைபாதையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா நடப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் உத்தமபாளையத்தில் ஆர்.டி.ஓ., தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று ஆர்.டி.ஓ., கவுசல்யா, ஏ.எஸ்.பி., ஸ்ரேயா குப்தா தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் குமுளி வழியாக கோயிலுக்கு சென்றனர். கோயில் வளாகத்தில் 2 ஆண்டுகளாக விழா நடைபெறாததால் முட்புதர்கள் சூழ்ந்திருந்தது. இதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து பளியன்குடி வரை தமிழக வனப்பகுதி வழியாக நடந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். இப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.