உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதை, கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை கோலாகலம்!

வேதை, கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை கோலாகலம்!

வேதாரண்யம்: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி நேற்றுக்காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். வேதாரண்யம் புராண கால பெருமையுடைய ஷேத்ரம் ஆகும். இங்குள்ள சன்னதி கடலிலும், கோடியக்கரையிலுள்ள ஆடி சேது சித்தர்கட்டம் கடலிலும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுள்ள மணிகர்ணிகை தீர்த்தத்திலும், வேதாமிர்த ஏரியிலும் இறந்து போன தங்களின் முன்னோர் நினைவாக தில தர்ப்பணம் என்னும் பலிகர்ண பூஜைகளை செய்து, கடலில் புனித நீராடினால் நன்மை உண்டாகும் என்பது ஹிந்துக்களிடம் நம்பிக்கை நிலவி வருகிறது. நடப்பாண்டும் வழக்கம்போல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிதுர்திதி, தர்ப்பண பூஜைகளை செய்து, வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராடினர். இதனால், கடற்கரைகளில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இதைத்தொடர்ந்து வேதாரண்யேஸ்வரர் கோவிலுள்ள மணிகர்ணிகை  தீர்த்தத்தில் நீராடி திருமண கோலத்திலுள்ள வேதாரண்யேஸ்வரர் ஸ்வாமியையும், துர்க்கையம்மனையும் பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்பார்வையில் பணியாளர்கள் செய்திருந்தனர். வேதாரண்யம் நகராட்சி, பஞ்., யூனியன், கோடியக்கரை பஞ்., மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வேதாரண்யம் கோடியக்கரைக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. ஆடி அமாவாசை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாட்டை வேதாரண்யம் டி.எஸ்.பி., குணசேகரன் தலைமையில் போலீஸார், ஊர்க்காவல் படையினர் மேற்கொண்டனர். நேற்றுகாலை முதல் ஒன்பது மணிவரை கனமழை பெய்தபோதும், கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !