ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா: பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரங்கமன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 8:45 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ரகுராம் பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் பச்சை பட்டு உடுத்தி ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆத்துக்கடை சந்திப்பு வந்தனர். அங்கு மண்டகபடிதாரர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். காலை 10:40 மணிக்கு ஆண்டாளை, ரெங்கமன்னார் மூன்று முறை வலம் வந்து எதிர்சேவை வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதிகள் எழுந்தருளினார். காலை 7:45 மணிக்கு அர்ஜுனா ஆற்றில் இறங்கிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கலாராணி, கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.