உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோவிலில் அடாவடிகள் நடமாட்டம்: பக்தர்கள் கடும் வேதனை

திருச்செந்தூர் கோவிலில் அடாவடிகள் நடமாட்டம்: பக்தர்கள் கடும் வேதனை

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திரிசுதந்திரர்கள் என்ற பெயரில் சிலர், பக்தர்களிடம் அடாவடி தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது, பக்தர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்றது. இது குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. கடற்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், தமிழகத்திலேயே 9 கால பூஜைகள் நடப்பது இங்கு மட்டும் தான். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலா பயணியரும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். சராசரி ஆண்டு வருவாய் 50 கோடி ரூபாயை கடந்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் வசதி படைத்தவர்கள் மட்டுமே இலகுவாக தரிசனம் செய்ய முடியும் என்பதும் நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது.திருச்செந்துார் தொகுதியில் போட்டியிடும் அரசியல் பிரமுகர்கள், இக்கோவிலை, திருப்பதியாக மாற்றுவோம் என, ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்குறுதிகளை அளிப்பர்.

ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் யாரும் எடுக்கவில்லை. இதற்கு கோவிலில் பக்தர்களுக்கு கைங்கர்யம் செய்து வரும் திரிசுதந்திரர்கள் என்று அழைக்கப்படும் அர்ச்சகர்கள் தான் முக்கிய காரணம். அர்ச்சனை சீட்டுஇக்கோவிலை பொறுத்த வரை, மூலவரான சுப்பிரமணிய சுவாமி சன்னிதி மற்றும் வள்ளி, தெய்வானை சன்னிதிகளில், போத்தி என்றழைக்கப்படும் அர்ச்சகர்களும், வெங்கடாச்சலபதி சன்னிதியில் ஐயங்கார்களும், சண்முகர் உள்ளிட்ட பிற சன்னிதிகளில் பட்டர்களும் பணியாற்றி வருகின்றனர். திரிசுதந்திரர்கள் கோயவல் நகை பொறுப்பு, தங்கத்தேர் கைங்கர்யம், ஜெயந்திநாதர் சப்பர சீர்பாதம், பக்தர்களுக்கு கைங்கர்யம் செய்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் கிடைக்கும் தட்சணையும், அர்ச்சனை சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் குறிப்பிட்ட பங்கு தொகையும் தான்.

இவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி உண்டு. ஆனால், ஒட்டுமொத்தமாக அனைவரும் உள்ளே நடமாடுகின்றனர். இதனால் பக்குவம் இல்லாத சிலர் பக்தர்களை தாக்குவது, அடாவடி செயல்களில் ஈடுபடுவது என, தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இம்மாதம் ௮ம் தேதி இரவு, கோவிலில் திரிசுதந்திரர் என்ற பெயரில், சில அடாவடி பேர்வழிகள் தகாத வார்த்தைகள் பேசி, பக்தர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல புகார்கள் காவல் நிலையத்தில் தெரிவித்தும், நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. போலீசாரின் தயக்கம், அடாவடி பேர்வழிகளுக்கு கூடுதல் அடாவடி தனத்தில் ஈடுபட உதவியாக உள்ளது என, பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்நிலையில், வசதி படைத்த பக்தர்களிடம் சன்மானம் பெற்று, அவர்களை குறுக்கு வழியில் தரிசனம் செய்ய வைப்பதாக கூறி அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. இதனால் பக்தர்களுக்கும், இவர்களுக்கும் தள்ளுமுள்ளு, கைகலப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு, பக்தர்கள் தாக்கபடுவதும் நடந்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருச்செந்துார் கோவிலில் கடவுள் முருகன் மட்டுமே வி.ஐ.பி., என்றும், மற்ற அனைவருமே சமம் என்றும் கூறி, 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் இலவச தரிசனம் என, இரண்டு தரிசன முறைகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டது.

இது அனைத்து பக்தர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனால் வருவாய் பாதித்ததால், பழைய நடைமுறையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, திரிசுதந்திரர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.குடிநீர் வசதி இல்லைதற்போதுள்ள தரிசன முறையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரிசன முறைகேடுகளை தவிர்க்கவும், பக்தர்கள் எளிமையாக தரிசனம் செய்யவும், கட்டண தரிசனத்தை முழுதுமாக ஆன்லைன் மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது தரிசனத்திற்கு திருப்பதியை போல் இருக்கை வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் அறைகள் அமைத்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான இடவசதிகள் கோவிலில் உள்ளது. தற்போது கூட்ட நாட்களில், பக்தர்கள் வரிசையில் செல்லும் போது, 3 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த வரிசைகளில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை; குடிநீர் வசதி இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் பக்தர்களுக்கு கைங்கர்யம் செய்ய பக்குவம் பெற்ற அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, ஷிப்ட் முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !