சூலூர் மற்றும் காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா
சூலூர்: முத்துக்கவுண்டன் புதூர் மற்றும் சூலூர் காட்டூர் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில், ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவிலில், கடந்த, ஏப்., 19 ம்தேதி பண்டிகை சாட்டப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஏப்., 26 ம்தேதி சிவன் சக்தி கரகங்கள் எடுத்துவரப்பட்டு, அக்னி கம்பம் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். இன்று அம்மை அழைத்தல் நடந்தது. தொட்ர்ந்து, மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் விழா நடந்தது. ஏராளாமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த, ஏப்.,19 ம்தேதி பண்டிகை சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அக்னி கம்பத்துக்கு, பெண்கள் பக்தி பரவசத்துடன் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். மே 1 ம்தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று நொய்யல் ஆற்றில் இருந்து, அம்மை அழைத்தல் நடந்தது. ஏராளமான பெண்கள், பால் குடம், தீர்த்தக் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பலர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.