ரங்கம்பாளையத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே புதிதாக கட்டிய லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுமுகை ரங்கம்பாளையம் சின்னகள்ளிபட்டி ஊராட்சி சங்கம் பாளையத்தில் கணேசபுரத்தில் யோக வள்ளி தாயார் சமேதராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் புதிதாக கட்டப்பட்டது. கோவிலில் ஐந்து கலசங்கள் கொண்ட கஜபிருஷ்ட கோபுரம் அமைக்கப்பட்டது. கோவிலில் லட்சுமி நாராயணன், லட்சுமி வராகர், லட்சுமி ஹயக்ரீவர், யோகநரசிம்மர் சந்தானகிருஷ்ணன் ஆகிய விக்கிரகங்களும், விஷ்வக்சேனர் கருடாழ்வார், துவாரபாலகர்கள், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகா மண்டபத்தில் ஐந்தடி உயரம் கொண்ட பன்னிரு ஆழ்வார்களின் விக்கிரங்கள், அஷ்டதிக் பலிபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலில் திவ்ய தேச வேத விற்பன்னர்களை கொண்டு, பாஞ்சராத்திர ஆகம விதிமுறைப்படி கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. விழாவில் காரமடை வெங்கடேஷ் பிரசாத் தலைமையில், ஸ்ரீரங்கம் கேசவரமண ஐயங்கார், பார்த்திபன் ஐயங்கார், சேஷாத்திரி ஐயங்கார், திருவேங்கடம் ஐயங்கார், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் யாக வேள்விகளை நடத்தினர். இன்று காலை, 7:00 மணியளவில் தீர்த்த குடங்களை யாகசாலையில் இருந்து, வேள்வியில் நடத்திய ஐயங்கார்கள், கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு கோபுர கலசத்திற்கும், மூலவருக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கோவில் ஸ்தாபகர் கிருஷ்ணன் பட்டாச்சாரியார், கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கப்பிரியன்ஐயங்கார், டிரஸ்ட் நிர்வாகிகள் வைஜயந்தி, கல்யாணி விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் உபயதாரர்கள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகளை முத்துகிருஷ்ணன் நேர்முக வர்ணனை செய்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நாட்டிய நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.