உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் சாற்றுமுறை விழா : ஸ்ரீபெரும்புதுாரில் விமரிசை

ராமானுஜர் சாற்றுமுறை விழா : ஸ்ரீபெரும்புதுாரில் விமரிசை

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் சாற்று முறை விழா நேற்று விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர்.

சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் ராமானுஜரின் அவதார உற்சவ விழா ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொண்டாடப் பட்டும்.இந்த ஆண்டு ராமானுஜர் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழா, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலை வாகனத்தில் ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்திரை திருவாதிரை நட்சத்திரம் தினமான நேற்று சாற்றுமுறை விழா நடந்தது. காலை 4:30 மணிக்கு மஞ்சத்திலிருந்து சுவாமி புறப்பட்டார். காலை 5: 00 மணிக்கு தங்க மண்டபம் ஊஞ்சல், ஸ்ரீதாயார் சன்னிதி, ஸ்ரீராமர் சன்னிதி கண்டருளுதல் நடைபெற்றது.காலை 5:30 மணிக்கு ஒய்யார நடையில், வாகன மண்டபத்தை ராமானுஜர் சென்றடைந்தார். காலை 7:00 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது.


பகல் 12:00 மணிக்கு ராமானுஜர் அவதார மண்டபத்தில், தொட்டில் சேவை, சங்கு பால் அமுது செய்தல் நடைபெற்றது. மாலை 3:00 மணிக்கு ராமானுஜருக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஈரவாடை தீர்த்தம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து திருப்பாவை சேவை நடந்தது.இரவு 7:00 மணிக்கு திருமேனி சேவையுடன் ராமானுஜர் கண்ணாடி அறையை சென்றடைந்தார். இரவு 9:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இரவு 9:00 மணிக்கு நாலுக்கால் மண்டபத்தில் சுவாமிக்கு நித்திய விபூதி, லீலா விபூதி, மங்களா சாசனம் நடைபெற்றது. நள்ளிரவு 12: 00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரவு முழுதும் பஜனை பாடல்கள் பாடி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர்.சாத்து முறை விழாவை யு -- டியூப் சேனல் வாயிலாக கோவில் நிர்வாகத்தினர் ஒளிபரப்பு செய்தனர். ஏராளமான பக்தர்கள் வீட்டில் இருந்தே தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !