அம்பாத்துறை காட்டு மாரியம்மன் சிலையில் கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு
சின்னாளபட்டி: அம்பாத்துறை காட்டு மாரியம்மன் கோயில் சிலையில், கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சின்னாளபட்டி அருகே அம்பாத்துறை காட்டு மாரியம்மன் கோயிலில், மார்பளவு ராஜயோக நாகேஸ்வரி அம்மன் சிலை உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்ததாக தகவல் பரவியது. அம்பாத்துறை ஜமீன் மாக்காள நாயக்கர் தலைமையில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு, அம்மன் அருள் வந்து பேசிய ஒரு பெண், அம்பாத்துறை பத்ரகாளியம்மன், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின்போது, காட்டு மாரியம்மன் வழிபாடு பாரம்பரியமாக நடப்பது வழக்கம். கடந்த வாரத்தில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது, காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடக்காததே அம்மன் கண்ணீருக்கு காரணம் என, கூறியுள்ளார். இதையடுத்து காட்டு மாரியம்மன், ராஜயோக நாகேஸ்வரி அம்மனுக்கு, பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.