உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவிலில் உடைந்த சிலை வைத்ததாக சர்ச்சை

சுகவனேஸ்வரர் கோவிலில் உடைந்த சிலை வைத்ததாக சர்ச்சை

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உடைந்த சிலையில் மருந்து சாத்துப்படி செய்து வைத்துள்ளதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், ஜீர்ணோத்தாரண விதிப்படி சிலை நிறுவப்பட்டுள்ளதாக ஸ்தபதி விளக்கம் அளித்துள்ளார். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 2018 ஆக., 29ல், முதல்கட்ட பாலாலயம் செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக, 2019 ஜன., 23ல் நடந்தது. அப்போது, சுப்ரமணியர் உள்ளிட்ட பரிவார சுவாமி சிலைகள், கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன.ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் நடக்கும் திருப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. செப்., 7ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், மூலவரை தரிசிக்க செல்லும் பிரதான நுழைவாயிலின் (கிழக்கு ராஜகோபுரம்) வடக்கு பக்கத்தில், திண்ணை மேல் உள்ள சுவரில் சுப்ரமணியர் சிலை, கடந்த, 25ல் மீண்டும் நிறுவப்பட்டது. அதன் உயரம், 83 செ.மீ., அகலம், 34 செ.மீ., அச்சிலை கிரீட பகுதியில் இருந்த கீறலுக்கு மருந்து சாத்துப்படி செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்த பக்தர்கள், உடைந்த சிலைக்கு மருந்து சாத்துபடி செய்து வைத்துள்ளதாக சர்ச்சையை கிளப்பினர்.  ஆனால், கோவில் அர்ச்சகர்கள் சிலர், ‘சிலையில் கீறல் தான் இருந்தது; உடையவில்லை’ என்றனர்.உடைந்த சிலை வைக்கப்பட்டுள்ளதா, சிலைகள் எடுக்கும்போது சேதம் அடைந்ததா என,  பக்தர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் சேதமானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தினர்.இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல ஸ்தபதி கவுதமன் கூறியதாவது: சிலைகளின் தன்மை குறித்து, ஜீர்ணோத்தாரண விதிப்படி இரு வகைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘மகாங்கம்’ விதியில் சுவாமி சிலையின் தலை, கழுத்து, உடம்பு, கை, கால் உடைந்திருந்தால் மாற்றப்பட வேண்டும். ‘பிரத்யாங்க’ விதிப்படி சிலையில் உள்ள கிரீடம், உடை, ஆபரணம், விரல் நகம், விரல் ஆகியவற்றில் கீறல் இருந்தால் அஷ்டபந்தன சீர்செய்து கொள்ளலாம் என, சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி சுப்ரமணியர் சிலை சரிசெய்து நிறுவப்பட்டுள்ளது. பழமையான சிலை என்பதால் மாற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.கோவில் உதவி கமிஷனர் சரவணன் கூறியதாவது: இரண்டாம் கட்ட பாலாலயத்தின்போது, சிலைகள் எடுக்கும் முன் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஆவணமாக வைத்துள்ளோம். அப்போது சுப்ரமணியர் சிலையின் கிரீட பகுதியில் கீறல் இருந்தது கண்டறியப்பட்டது.  சிலைகள், உலோக திருமேனி மையத்தில் பாதுகாப்பாக தான் வைக்கப்பட்டிருந்தன. அங்கு சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மண்டல ஸ்தபதி, அர்ச்சகரின் கருத்துப்படி, மீண்டும் சிலை நிறுவப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் இதுபோன்ற தகவல் பரப்பப்படுகிறது. இனி தவறான தகவல் பரப்புவோர் மீது போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !