உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் முடக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்

கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் முடக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பெயரில் துவக்கப்பட்டுள்ள, போலியான, சட்ட விரோத இணையதளங்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அனைத்து முக்கிய கோவில்களுக்கும் தனித்தனி இணையதளங்கள் உள்ளன. அர்ச்சனை, அபிஷேகம் போன்றவற்றிற்கு, ஆன்லைனில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற, இணையதளங்களில் க்யூஆர் கோடு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். கோவில்கள் பெயரில் சில மூன்றாம் நபர்கள் பல இணையதளங்களை உருவாக்கியுள்ளனர்; பக்தர்களிடம் ஆன்லைனில் நன்கொடை பெறுகின்றனர். இது சட்டவிரோதம். பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்தில் இத்தகைய இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி வசூலிக்கப்படும் நன்கொடைகள் எங்கு செல்கின்றன; யார் பயனடைகின்றனர் என்பது தெரியவில்லை. எனவே, கோவில்கள் பெயரில் துவக்கப்பட்டுள்ள போலியான, சட்ட விரோத இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

அதுபோல, ராமநாதபுரம் மார்கண்டன், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர்கள் இணையதளம் நடத்துவதை முடக்க உத்தரவிட வேண்டும் என, மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்களை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. திருக்கடையூர் கோவில் விவகாரம் தொடர்பாக, மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை கமிஷனர் மோகனசுந்தரம் ஆஜரானார். அவர், திருக்கடையூர் கோவில் பெயரில் தனியாக இணையதளம் துவக்கியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு: உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் கோவில்களுக்கு நன்கொடை அளிக்கின்றனர். கோவில் கோவிலாக இருக்க வேண்டும். அது மக்களுக்கானது மட்டுமே. கோவில் பெயரை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இத்தகைய இணையதளங்களை தடை செய்தால் மட்டும் போதாது. சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், உள்துறை செயலர், தமிழக அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் சில அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும், 26க்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !