உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகமவிதி மீறல் : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தாமல் திறப்பு

ஆகமவிதி மீறல் : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தாமல் திறப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் வருவாய் பெருக்கும் நோக்கில் ஆகம விதியை மீறி மதியம் 2 மணி வரை நடைசாத்தாமல் இருந்தது. இதுகுறித்து அதிகாரியிடம் பக்தர்கள் முறையிட்டனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆகம விதிப்படி காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, இதனைதொடர்ந்து கால பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாரணை முடிந்ததும், மதியம் 12:50 மணிக்கு நடைசாத்தப்படும். இதன்பின் மதியம் 3 மணிக்கு நடை திறந்து சாயரக்சே, அர்த்தசாமம், பள்ளியறை பூஜை முடிந்ததும் இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனால் கடந்த இரு மாதமாக வெள்ளி, சனி, ஞாயிறில் மதியம் 2 மணி வரை நடை சாத்தாமல், திறந்து வைத்து பக்தர்கள் தரிசனத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சேர்ந்த புரோகிதர் கோபிஆச்சார், பக்தர்கள் சிலர் நேற்று மதியம் 1:30 மணிக்கு கோயில் சுவாமி சன்னதிக்கு வந்து கோயில் அதிகாரிகளிடம், ஆகமவிதியை மீறி இன்னும் ஏன் நடை சாத்தாமல் உள்ளீர்கள் , என முறையிட்டனர். அதற்கு, பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க வெள்ளி, சனி ஞாயிறு நாளில் மதியம் 2 மணி வரை நடை திறக்கப்படுகிறது என மழுப்பலாக கூறினர்.

இதுகுறித்து திருச்சி கோபிஆச்சார் கூறுகையில் : ராமேஸ்வரம் கோயில் புனித தலமா, பொருட்காட்சி கூடமா, இக்கோயிலை வணிக தலமாக மாற்றி, வருவாய் பெருக்கும் நோக்கில் அதிகாரிகள், பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்த ஆகம விதியை மீறி மதியம் 2 மணி வரை நடைசாத்தாமல் இருப்பது வேதனைக்குரியது. அதிகாரிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !