உலக்கை அருவி அகஸ்தியர் கோவிலில் அன்னபடையல்
நாகர்கோவில்: உலக்கை அருவி அகஸ்தியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த உலக்கை அருவி அகஸ்தியர் சுவாமி
கோவிலில் மாதந் தோறும் பவுர்ணமி நாட்களிலும், சித்திரை விஷூ மற்றும் ஐப்பசி விஷூ ஆகிய நாட்களிலும் கேசவன்புதூர் வெள்ளாளர் சமுதாயம் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று 18ம் தேதி கும்பாபிஷேகம் நடந்து பதினெட்டு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு கேசவன்புதூர் வெள்ளாளர் சமுதாயம் சார்பில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சார்த்துதல், 12 மணிக்கு மகாகும்பாபிஷேகம், அதனை தொடர்ந்து அகஸ்தியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1 மணிக்கு அகஸ்தியர் சுவாமிக்கு வடை மாலை சார்த்தி அன்னபடையல் படைக்கப்பட்டு தேவாரம் பாடி தீபாராதனை நடந்தது. பின்னர் அன்ன படையல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கேசவன்புதூர் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அகஸ்தியரை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கேசவன்புதூர்வெள்ளாளர் சமுதாய டிரஸ்டிகள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.