ராமேஸ்வரத்தில் ரூ.200 கட்டண தரிசனத்தில் தள்ளுமுள்ளு : பக்தர்களுக்கு ஆபத்து
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ரூ.200 கட்டண விரைவு தரிசனத்தில் தள்ளுமுள்ளு ஏற்படுவதால், பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. விடுமுறை நாளான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இங்கு ரூ.100 மற்றும் இலவச தரிசன வரிசை உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன் விரைவு தரிசனம் என்ற பெயரில் ரூ. 200க்கு கட்டண வழியை கோயில் நிர்வாகம் துவக்கியது.
இந்த விரைவு தரிசனத்திற்கு நேற்று ஏராளமான பக்தர்கள் ரூ. 200 செலுத்தி சுவாமி சன்னதி உள்ள முதல் பிரகாரத்தில் குவிந்தனர். இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்த குறைவான கோயில் காவலர்கள், போலீசார் இருந்ததால், நெரிசல் அதிகரித்து பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இனி வரும் நாளில் விரைவு தரிசனத்தில் கூட்டம் அதிகரித்து, பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தென்மண்டல அமைப்பாளர் அ.சரவணன் கூறுகையில் : விரைவு தரிசனத்தில் பக்தர்கள் சிரமம் இன்றி எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை இருந்தும், பலனில்லை. விரைவு தரிசன வழியை கணக்கில் கொள்ளாமல், கோயில் நிர்வாகம் லாப நோக்கில் அதிக டிக்கெட்டுகளை விற்று, நெரிசலை ஏற்படுத்துகிறது. இதனால் பக்தர்கள் நிம்மதி இன்றி வேதனையுடன் செல்கின்றனர். மேலும் விரைவு தரிசன பக்தர்களுக்கு பிரசாதம் கூட வழங்குவதில்லை. மாறாக அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து, மறுமுறை கோயிலுக்கு வராதபடி கோயில் நிர்வாகம் செயல்படுகிறது. இதற்கு தீர்வு காணாவிடில் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.