திருத்தணி முருகன் கோவில் செல்லும் வழி ஆக்கிரமிப்பு!
திருத்தணி: மலைக் கோவிலுக்கு செல்லும் மலை பாதை படிகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளதால், அந்த வழியாக செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சரவணப்பொய்கையில் புனித நீராடிய பின், படிகள் வழியாக நடந்து செல்வர். பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், குளத்தைச் சுற்றி, மலை படியின் இரு புறமும் திருமண மண்டபம், விடுதிகள் கட்டியுள்ளனர். இவற் றை சிலர் வாடகைக்கு விட்டுள்ளனர். சிலர், ஆக்கிரமித்து கடைகள் கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். மலை படிகளின் இருபுறமும் தேங்காய், பழம், பொம்மை, பஞ்சாமிர்தம், பெட்டிக்கடை என, 150 கடைகள் உள்ளன. இவற்றில், 17 கடைகள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளன.கீற்று கொட்டகைகள்சிலர் கடைகள் முன் கம்பிகளை பந்தல் போல் அமைத்து படிகளை ஆக்கிரமித்து கடையை விரிவுபடுத்தியுள்ளனர். இதனால், அலகு காவடி எடுத்து வரும் பக்தர்கள், நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். விழாக்காலங்களில் பக்தர்கள் படிகள் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பல கடைகள் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நேரங்களில், தீ விபத்து ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும். தீ தடுப்பு கருவிகள் எதுவும் இங்கு பொருத்தப்படவில்லை. படிகளில் பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைக்காரர்களை அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கவிதாவிடம் கேட்ட போது, ""கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனடியாக அகற்றப்படும். நடவடிக்கை பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால், கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஒவ்வொரு விழாவின் போதும் படிகளில் சென்று ஆய்வு செய்து வருகிறோம், என்றார்.