சதுரகிரியில் மகாசிவராத்திரி வழிபாடு: பக்தர்கள் இரவு நேர தரிசனத்திற்கு அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்.18 மாலை முதல் மறுநாள் காலை வரை நடக்கும் இரவு நேர நான்கு கால பூஜையை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். எதிர்பாராத வகையில் மழை பெய்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை வனத்துறை தெரிவிக்கும். இந்நிலையில் தற்போது மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 18 முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் சுவாமி தரிசனம் செய்தவுடன் மலை அடிவாரம் திரும்ப அறிவுறுத்தப்படும். தற்போது பிப்.18 அன்று மாலை 6:00 மணி முதல் மறுநாள் பிப்ரவரி 19 காலை 6:00 மணி வரை மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாசி அமாவாசையை முன்னிட்டு பிப்ரவரி 21 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர். கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை, வனத்துறை தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.