உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் அங்காளம்மன் கோவில்களில் குண்டம்; பக்தர்கள் பரவசம்

சூலூர் அங்காளம்மன் கோவில்களில் குண்டம்; பக்தர்கள் பரவசம்

சூலூர்: சூலூர் வட்டாரத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் சிவாரத்திரியை ஒட்டி, குண்டம் நடந்தது.

மகா சிவராத்திரியை ஒட்டி, சூலூர் மேற்கு அங்காளம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. பள்ளைய பூஜை முடிந்து நேற்று அதிகாலை, ஏராளமான பக்தர்கள் பய பக்தியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள அரிய பிராட்டி அங்காளம்மன் கோவில், காளியாபுரம், ராசிபாளையம், அருகம்பாளையம் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டது. இங்கு, சிவ ராத்திரியை ஒட்டி, குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த, 9 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த, 17 ம்தேதி இரவு, ராசிபாளையத்தில் இருந்து, அங்காளம்மன்,பேச்சியம்மன் உற்சவ மூர்த்திகள் அழைத்து வரப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.10:00 மணிக்கு நான்கு வீதிகள் வழியாக அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். மாலை, 3:30 மணிக்கு, உற்சவ மூர்த்திகள் தேருக்கு எழுந்தருளினர். 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி, பராசக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பரிவேட்டை உற்சவம் நடந்தது. நேற்று மதியம் மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது. இதேபோல், இருகூர் அங்காளம்மன் கோவிலிலும் குண்டம் விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !