பாறசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
களியக்காவிளை: பாறசாலை மண்டல பாலகோகுலம் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
பாறசாலை மண்டல பாலகோகுலம் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை மாணவ, மாணவியருக்கான பேச்சு, பாட்டு, வினாடி - வினா போட்டிகள் நடந்தது.தொடர்ந்து பாறசாலை மண்டலத்தில் பளுகல் கிருஷ்ணசுவாமி கோயில், இலங்கம் புவனேஸ்வரி கோயில், குறுங்குட்டி, பவுதியான்விளை கிருஷ்ணசுவாமி கோயில், முறியத்தோட்டம், கருமானூர், வாழப்பள்ளி சுபானந்த ஆஸ்ரமம், இஞ்சிவிளை, ஐங்காமம், கீழத்தோட்டம் கோயில்களில் இருந்து பாறசாலை மகாதேவர் கோயிலுக்கு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணசுவாமி ரதங்கள், கிருஷ்ண வேடமணிந்த சிறுவர், சிறுமியர், அலங்கார ரதங்கள், முத்துக்குடை அணிவகுப்புடன் பாறசாலை போஸ்ட் ஆபிஸ் ஜங்ஷன், ஆஸ்பத்திரி ஜங்ஷன் வழியாக ஊர்வலம் பாறசாலை மகாதேவர் கோயிலை வந்தடைந்தது.ஒவ்வொரு கோயிலில் இருந்தும் வந்த ஊர்வலத்திற்கு தாலப்பொலி ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. பாறசாலை மகாதேவர் கோயிலில் நடந்த கிருஷ்ணஜெயந்தி விழாவில் பாலகோகுலம் நிர்வாகி சுகுமருவத்தூர் தலைமை வகித்தார். பாபு முன்னிலை வகித்தார். பிரேம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.
கண்ணன், குமார், பத்மலோசனன் பேசினர். சிறந்த ரதங்கள், அலங்கார ஊர்திகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.