உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுார் ஜெம்புகேஸ்வரர் கோவிலில் பாலாலயம் துவக்கம்

கோவிலுார் ஜெம்புகேஸ்வரர் கோவிலில் பாலாலயம் துவக்கம்

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலுாரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணியின் தொடக்கமாக பாலாலய நிகழ்ச்சி நடந்தது.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான காசவளநாடு கோவிலுாரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோவிலில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, காசவளநாட்டைச் சேர்ந்த 18 கிராம பெரியவர்களும் கூடி கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்தனர். தொடர்ந்து திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சி இன்று(10ம் தேதி) நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தினர். கோவில் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து புனிதநீர் கொண்ட கடங்கள் வைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யாகம் நடத்தினர். பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்தது.தொடர்ந்து கடம்புறப்பாடு நடைப்பெற்று, கோவில் வெளிபிரகாத்தில் உலா வந்தது. அப்போது பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுகிலும் பூக்கள் துாவி வரவேற்றனர். பின்னர் அம்மன் சன்னதியில்   ராஜகோபுரம், சுவாமி விமானம், அம்மன் கோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு பாலாலயம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !