உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டியபட்டி முனியப்பன் கோவில் திருவிழாவில் பாரிவேட்டை நிகழ்ச்சி

ஆண்டியபட்டி முனியப்பன் கோவில் திருவிழாவில் பாரிவேட்டை நிகழ்ச்சி

சாணார்பட்டி, சாணார்பட்டி கம்பிளியம்பட்டி ஊராட்சி ஆண்டியபட்டி முனியப்பன் கோவில் திருவிழாவில் பாரிவேட்டை எனும் பாரம்பரிய புலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி ஏப்.4 கருப்பணசாமிக்கு பழம் வைத்தல், ஞான விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்தலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை தோரணம் கட்டுதல், முனியப்பன் சாமிக்கு கண் திறப்பு வைபவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக மாலை பாரி வேட்டை எனும் பாரம்பரிய புலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்சட்டை அணியாமல், தலையில் மல்லிகை பூவால் ஆன தலைப்பாகை வைத்து, கையில் ஈட்டியுடன், புலி வேஷம் அணிந்த இளைஞரை வேட்டை ஆடுவது போல் பாவனை செய்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தினர். இந்த வினோத நிகழ்வை சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பார்த்தனர். தொடர்ந்து இரவு 10 மணிக்கு முனியப்பனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், வானவேடிக்கை நிகழ்ச்சியும், இரவு 1 மணிக்கு எரிசோறு நிகழ்ச்சியும் நடந்தது. விழா நிறைவாக இன்று மாலை முனியப்பனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !