அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு
வேலுார் : வேலுார் அருகே, விண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடந்தது.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, விண்ணம்பள்ளியில் அகஸ்தீஸ்வரர் என்கிற பொன்னிஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடக்கும். அந்த நிகழ்வு இன்று(ஏப்.,07) காலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை அரை மணி நேரம் நடந்தது. கோவிலில் உள்ள மூன்று வாசல்படிகளை தாண்டி கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் போது கருமை நிறத்தில் உள்ள சிவலிங்கம் பொன்னிறமாக மாறி ஜொலிக்கும். தொடர்ந்து ஒரு வாரம் இதுபோல சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கம் மீது பட்டு ஒளிரும் நிகழ்வு நடக்கும். அகத்திஸ்வரரை வழிபட்ட சூரிய பகவான் வந்தார் என அழைக்கப்படும் இந்த நிகழ்வை பார்த்து சிவலிங்கத்தை தரிசித்தால், பாவம் விலகும், புண்ணியம் கிடைக்கும், தன லாபம் வரும் என்பது சித்தர்கள் வாக்கு. இது போன்ற நிகழ்வு இந்த கோவிலில் 1,000 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.